மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என பெற்றோர் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி +2 படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த நிலையில் திடீரென அவர் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறியது.
நேரில் வந்த அந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல் துறைக்குச் சொந்தமான வாகனமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
பள்ளியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் 300 மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் அறிவிப்பின்றி குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலவரத்தினால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மட்டுமின்றி அதனை தொடர்புடைய இசிஆர் இன்டர்நேஷனல் என்னும் சிபிஎஸ்இ பள்ளியும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
Tags :