எஸ்.பி.வேலுமணிக்கு தொடரும் சிக்கல்

by Editor / 09-09-2022 03:41:39pm
எஸ்.பி.வேலுமணிக்கு தொடரும் சிக்கல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையும் இதில் அறிக்கை தாக்கல் செய்தது. வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது. அதே சமயம் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், டெண்டர் முறைகேடு புகார் வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்றும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கட்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Tags :

Share via