பாஜக நிர்வாகியின் காருக்கு தீவைப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி முன்னாள் நகர பொருளாளராக பதவி வகித்து வந்தவர் சிவசேகர்.இவர் தற்போது பஞ்சை புளியம்பட்டி பிரச்சார அணி பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
திடீரென இரவு சுமார் ஒரு மணி அளவில் அவரது வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை கண்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசேகர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பாஜக மூத்த நிர்வாகி சிவசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தற்போது பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகளை குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வரும் நிலையில் புஞ்சைபுளியம்பட்டியில் பாஜக மூத்த நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தையடுத்து தற்போது பாதுகாப்பிற்காக புஞ்சை புளியம்பட்டி நகரம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :