குளத்தில் தவறிவிழுந்து 2 வயது குழந்தை பலி

by Staff / 14-10-2022 04:23:44pm
குளத்தில் தவறிவிழுந்து 2 வயது குழந்தை பலி

கன்னியாகுமாரி குமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் சேந்திவிளையை சேர்ந்தவர் பிரதீப் (35). இவர் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீ ஜா (32). இவர்களுக்கு 2 ஆண்பிள்ளைகள் மற்றும் 2 வயதில்  ஒரு பெண் குழந்தையும் உண்டு. நேற்று ஸ்ரீஜா 2 வயது பெண் குழந்தையுடன் சென்று பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது 2 வயது குழந்தை நடந்து அவர்களை விட்டு தனியாக சென்று விட்டது. இதை கவனிக்காத ஸ்ரீஜா தொடர்ந்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தையை ஸ்ரீஜா தேடும்போது குழந்தையை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் ஸ்ரீஜா கருங்கல் போலீசில் புகார் செய்தார். இது குறித்து  குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் குணசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று குழந்தையின் வீட்டருகே உள்ள குளத்தில் மூழ்கி தேடினர். அப்போது குழந்தை  ஆபத்தான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. உடனே உறவினர்கள் குழந்தையை கருங்கலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via