செந்தில்பாலாஜி மோதிக்கொள்ளும் அண்ணாமலை

by Staff / 27-10-2022 04:17:34pm
செந்தில்பாலாஜி  மோதிக்கொள்ளும் அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடந்து சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கார் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கார் உரிமையாளர், இறந்தவர் பெயர் உள்ளிட்டவை புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது. 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இயல்பு நிலை திரும்பியது. காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

தீபாவளி நாளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல் இல்லாமல் பண்டிகை கொண்டாட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதோ பதற்றம் நிலவுவது போல சிலர் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குரியது. சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர். அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது. நடந்த சம்பவம் வருத்தபடக்கூடியது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை. விசாரணை அடிப்படையில் தான் என்.ஐ.ஏ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. யாரும் சொல்லி செய்யவில்லை.

இராணுவ வீரர் உயிரிழப்பையே அரசியலாக்க முயற்சித்த நபர், கோவை கார் வெடிப்பை அரசியலாக்குகிறார். தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைதான். காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்வார்கள். காவல் துறையினர் விசாரணை அறிக்கை வெளியிடும் முன்பே, விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிடுகிறார் என்றால் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்.ஒரு சிலர் அரசியல் உள் நோக்கத்துடன் சொல்வதை மக்களிடம் கொண்டு போனால் பதற்றம் ஏற்படக்கூடும். எதை திண்ணால் பித்தம் தெளியும் என திரிகிறார்கள். முப்படை தளபதி இறப்பின் போது அக்கட்சியினர் சென்று அஞ்சலி செலுத்தினார்களா? விபத்து குறித்து விசாரிக்க சொன்னார்களா? உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூர் சந்தைக்கு போச்சு என்பார்கள். அப்படிதான் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

கார் வெடிப்பு சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள். கோவையில் பந்த் என்ற பெயரில் பதட்டத்தை மக்களிடம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பந்த் என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டினாலோ, அச்சுறுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியலில் பக்குவம் இல்லை, புரிதலும் இல்லை. அரசுக்கு அவப்பெயர் கிடைக்காதா என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் என்றார்.மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பித்தலாட்ட கட்சி என்பதை நிரூபிக்க வேண்டாம். பெரியார் எழுதிய புத்தகத்தில் 21-ம் பக்கத்தை அளித்தாலே போதும். இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம். வெங்காய அரசாங்கம் என பெரியார் கூறினார். இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம். ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில்சொல்ல வேண்டுமா..? என கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via