உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை-காவல்துறை எச்சரிக்கை.

by Editor / 27-10-2022 09:00:40pm
உரிய அனுமதியில்லாமல்  டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை-காவல்துறை எச்சரிக்கை.

சென்னையில், தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிப்பாட்டு தலங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் வனப்பகுதிகள்  போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதியுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக ஒரு சிலர் தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள இதர இடங்களிலும் உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.இதனை தொடர்ந்து 

இனிவரும் காலங்களில் உரிய அனுமதியில்லாமலும், தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளிலும் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை காவல் துறையின் உரிய அனுமதியுடன் பயன்படுத்திட வேண்டுமெனவும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும்,  சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

உரிய அனுமதியில்லாமல்  டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை-காவல்துறை எச்சரிக்கை.
 

Tags :

Share via