கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு -சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

by Editor / 15-11-2022 10:35:22am
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு -சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டு, இறுக்கமாக கட்டப்பட்டதாலும், அதிக நேரம் வைத்திருந்ததாலும், ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் இரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடந்த 8ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியா அழைத்து வரப்பட்டார். நவம்பர் 9ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு இரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக பத்தாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர் மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய்தோம். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரியவந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரு மருத்துவர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் புகார் அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மாணவி பிரியா முதலில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும். மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்.

 

 

Tags :

Share via