தனியார் பள்ளி சங்கத்திற்கு அரசு எச்சரிக்கை

by Editor / 26-06-2021 08:38:00am
தனியார் பள்ளி சங்கத்திற்கு அரசு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனியார் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றும் வாடகை, ஆசிரியர் சம்பளம், பேருந்துகள் பராமரிப்பு, பேருந்துகளுக்கான வரி, உள்பட எந்த கட்டணத்தையும் கட்டணம் கட்ட முடியவில்லை என்றும், தனியார் பள்ளிகளுக்கு அரசு எந்தவித சலுகையும் செய்யாமல் இருப்பதால் வேறு வழியில்லாமல் தனியார் பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளோம் என்றும் தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் நந்தகுமார் என்பவர் நேற்று பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென பள்ளிகளை மூடினால் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளை மூடுவோம் என்று நந்தகுமார் கூறியதற்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு உத்தரவு இல்லாமல் தனியார் பள்ளிகளை மூட முடியாது என பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, ‘அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பள்ளியும் மூட முடியாது எனவும் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அறிவித்து இருப்பது சரியல்ல என்றும் தெரிவித்தனர். இந்த அறிவிப்பை கண்டு பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், அரசு அனுமதி இல்லாமல் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

Tags :

Share via