கேரளாவுக்கு கடத்திய ரூ. 40 லட்சம் பறிமுதல் வாலிபர் கைது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள், குமரி மாவட்டம் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை குமரி மாவட்ட போலீசாரும், வருவாய் துறையினரும் அவ்வப் போது மடக்கி பிடித்து வருகின்றனர். கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில், பஸ் மூலம் கேரளாவுக்கு பணம் கடத்தப்படுவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு ஆய்வாளர் வினோஜ் தலைமையில் போலீசார், களியக்காவிளை அருகே உள்ள கொற்றாமம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தமிழக பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் பஸ்சில் இருந்த ஒரு வாலிபரின் செயல் போலீசாருக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது. அவனிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினான். இதனால் அவன் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதனை எண்ணி பார்த்தபோது ரூ. 40 லட்சம் இருந்தது. அந்தப்பணம் யாருடையது என்று கேட்டபோது வாலிபர் சரியாக பதிலளிக்க வில்லை. இதைதொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து பாறசாலை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது37) என தெரிய வந்தது. மேலும் பணத்தை அவர் பாண்டிச்சேரியில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதனை கொடுத்தது யார்? யாருக்காக கொண்டு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தை கத்தையாக பணம் சிக்கிய சம்பவம் தமிழக-கேரள எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :