ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: 3வது நீதிபதி நியமனம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது,அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக மகேந்திரன் என்பவர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இரு நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி எதிராக தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கவேண்டும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஒரு நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது சொத்து குவிக்கவில்லை என்றாலும் பேரூராட்சி தலைவராக இருந்த போதிலிருந்து அவரது சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார். மற்றொரு நீதிபதி விசாரணை தேவை இல்லை என உத்தரவிட்டு இருந்தார்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, நிர்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி , லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :