சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து.- 3 பேர் பலி

by Editor / 28-06-2021 08:57:00am
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து.- 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஏராளமானோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் கடந்த ஒரு வார காலமாக செயல்படத் தொடங்கியுள்ளன. வீடுகளிலும் கருந்திரி, பட்டாசுகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா வயது 25 இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்நிலையில் இன்று காலை பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் அவரது வீடு தரைமட்டம் ஆனது மேலும் அருகருகே இருந்த மூன்று வீடுகள் தரைமட்டம் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி செல்வமணி என்பவரும் மற்றொரு பெண்ணும் உயிரிழந்தனர்.

வீட்டின் உரிமையாளர் சூர்யா வயது 25 பிரபாகர் மற்றும் அன்னபாக்கியம் ஆகிய மூவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என தேடி வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ரபியாசல்மான் என்ற 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. வருவாய் துறை அதிகாரிகளும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு தயாரித்த போது நிகழ்ந்த வெடி விபத்தில் செந்தில் என்பவரின் வீடு சேதமடைந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via