நெல்லை விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது

by Editor / 28-06-2021 07:46:09pm
நெல்லை விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது

நெல்லை விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 42). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்தார்.  இவர் அந்தப்பகுதி குளக்கரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாபு குடும்பத்தினர் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தன் (19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது பாபுவின் குத்தகை குளத்தில், கந்தன் தரப்பினர் மீன் பிடித்துள்ளனர். இதை பாபு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தன் தரப்பினர் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று கந்தன் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் (19) மற்றும் 18 வயது மதிக்கத்தக்க 4 பேர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
------------------------

வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

நெல்லை அருகே உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் வெடிகுண்டு வைத்து மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகம், சலீம், வைரவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை பெருமாள் தெற்கு ரதவீதியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 29), சி.என்.கிராமத்தை சேர்ந்த உடையார் (31) ஆகிய 2 பேரையும் தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
----
கிணற்றில் மூழ்கி மெக்கானிக் சாவு

நெல்லை தாழையூத்து அருகே உள்ள சிதம்பர நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவர்  கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்தது. உடனே ராஜேந்திரபிரசாத் அந்த பந்தை எடுப்பதற்காக கிணற்றுக்குள் குதித்தார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி, ராஜேந்திர பிரசாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
தொடர்ந்து  மீண்டும் ராஜேந்திர பிரசாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via