குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

by Editor / 22-01-2023 12:52:25pm
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

இந்தாண்டு மெட்ரோ பணிகள் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த 3 நாட்கள் மற்றும் வரும் 26-ம் தேதியும் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகையானது கடந்த வெள்ளி கிழமை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது.அதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முதலாவதாக ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது.

பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிடவர்க் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும்,பதக்கங்களும்,காசோலையும் வழங்குவது போல் ஒத்திகையானது நடைப்பெற்றது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி , கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம் , பிற மாநில நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

நாட்டுபுற கலைஞர்களும் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 20 துறை சார்ந்த அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன.

 

Tags :

Share via