பள்ளி விடுதியில் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

by Staff / 31-01-2023 01:07:27pm
பள்ளி விடுதியில் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர் அரசு சித்த டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சுவாதி (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். அதன்பின்னர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் படிப்பில் முதல் மதிப்பெண் பெறும் வகையில் நன்கு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் காலையில் வகுப்புக்கு சென்று விட்ட நிலையில் மாணவி சுவாதி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். இதையடுத்து திடீரென்று சுவாதி பள்ளி விடுதியில் 3-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட சக மாணவிகள் விடுதி கண்காணிப்பாளருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், கல்வி அதிகாரி மற்றும் போலீசார் நேரில் சென்று விடுதி பொறுப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் சென்னையில் இருந்து விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. மாணவி சுவாதி தற்கொலை செய்வதற்கு முன்பு அதிகாலையில் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்கள் நன்றாக படிக்குமாறும், அதிக மதிப்பெண் எடுக்குமாறும் மாணவியிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் அவர், மன அழுத்தத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை தவிர வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி சுவாதியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு ஒருவாரத்தில் கிடைக்கும் என பெற்றோரிடம் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் வாங்கி சென்றனர்.
 

 

Tags :

Share via