புதுமை பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Editor / 08-02-2023 03:37:32pm
புதுமை பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிலுள்ள  அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமை பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தொடங்கப்பட்ட புதுமை பெண் திட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்தனர்.

இந்நிலையில் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் நாசர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கல்வியை பொதுவாக்கும் கடமையை நீதிக்கட்சி காலத்திலிருந்து பின்பற்றி வருகிறோம். கல்வி எல்லோரையும் சென்றடையும் வகையில் திராவிட இயக்கத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பெண் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு பணியிடங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை திமுக அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து இட்டது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் தான்.

பள்ளி செல்லும் மாணவிகள் அதன்பிறகு உயர்கல்வியை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இந்த திட்டத்தை வடசென்னையில் உள்ள பாரதி கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த திட்டத்துக்காக கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிப்பை தொடர்ந்துள்ளனர். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

https://youtube.com/live/gM8bMdn7hxw

 

Tags :

Share via