நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு-முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,மகன் கைது.

by Editor / 12-02-2023 09:46:18pm
 நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு-முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,மகன் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமலாபுரத்தினை சேர்ந்தவர் சுப்புராஜ்(53). முன்னாள் இராணு வீரரான இவர் தற்பொழுது கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ்க்கு கயத்தாரில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் தோட்டம் உள்ளது. ஆசிரியர் சுப்புராஜ்க்கும், அவரது ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. கண்ணனின் மனைவி ராஜேஸ்வரி தற்பொழுது திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் இன்று உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ் தனது தோட்டத்தில் இருந்த போது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, இவர்களது மகன் செல்வக்குமார் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் சுப்புராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதையெடுத்து சுப்புராஜ் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடியதாக தெரிகிறது. இருந்த போதிலும் அவரை பின்னால் துரத்தி சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ்க்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது மட்டுமின்றி, வலது கையில் நான்கு விரல்கள் துண்டானது. சுப்புராஜ் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த தோட்டத்த்தில் இருந்தவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த சுப்புராஜை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்(55), அவரது மகன் செல்வக்குமார்(35) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப்பிரச்சினையில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும்ப பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via