நெல்லையின் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்படும் - அமைச்சர் தங்கம்தென்னரசு

by Editor / 04-07-2021 06:35:36pm
நெல்லையின் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்படும் - அமைச்சர் தங்கம்தென்னரசு

நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர்  திருநங்கைகள் குடியிருப்பில் வசிக்கும் திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.இதில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் திருநங்கைகளுக்கான அடையாள அட்டையை 10 திருநங்கைகளுக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு  ஆகியோர் இணைந்து வழங்கினர்.அதனைத் தொடர்ந்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் திருநங்கைகள் சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் ₹7.80 லட்சத்திற்கான காசோலையை திருநங்கைகள் நடத்தும் 7 சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.  

பின்னர்  நரசிங்கநல்லூர்  திருநங்கைகள் குடியிருப்பில் வசிக்கும் 38 திருநங்கைகளுக்கு   கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். முகாமை பயன்படுத்தி திருநங்கைகள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெல்லை  பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை தொழிற்சாலைகள், தமிழ் பண்பாட்டுத்துறை & தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஊமைத்துரை கூடம் மற்றும் பார்வையாளர் அரங்கம் டிஜிட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட கணினி திரை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அருங்காட்சியகத்தில் வாசலில் கைவினைப் பொருட்கள் கடையை பார்வையிட்டவர் அங்கு ஓலையால் செய்யப்பட்ட பெட்டியை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை பெயர் வரக் காரணமாக அமைந்த பழமையான பாண்டியர்கால கோட்டையை நேரில் சென்று பார்வையிட்டார்.  பாளையங்கோட்டையில் நான்கு திசைகளில் பழங்கால கோட்டைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் அரசு அருங்காட்சியமாக தற்போதும் உள்ளது அடுத்ததாக தெற்கு பஜார் பகுதியில் அமைந்துள்ள பாண்டியர் காலத்தின் கோட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் என்ற பெயரில் செயல்பட்டது. வரலாற்று புராதனச் சின்னமான 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தளத்தை பார்வையிட்ட பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வகை செய்யும் நிதியை பயன்படுத்தி பாளையங்கோட்டை மரபுச் சின்னமான பாண்டியர் காலக் கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். அத்துடன் மரபுச் சின்னமாக அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் முக்கிய மரபு சின்னங்களில் பாளையங்கோட்டை  இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தாமிரபரணி நதிக்கரை சார்ந்த இடங்களில் சிவகளை கொற்கை ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. கொற்கையில் கடல்சார் அகழ்வாய்வு ஆய்வு மேற் கொள்ள திட்டம் இருக்கிறது. அதையும் தமிழக அரசு செயல்படுத்தும்.  தாமிரபரணி நதிக்கரையில் மக்களின் பழங்கால வாழ்வியல் நடைமுறைகளை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபங்களையும் பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழ் பண்பாட்டு தொல்பொருள் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ் பல்கலை கழகத்தில் படித்து ஆய்வு மேற்கொள்ளும் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

 

Tags :

Share via