தென்காசி மாவட்ட திமுகவினரிடையே தொடரும் உட்கட்சி பூசல்.
தென்காசி மாவட்ட திமுகவினரிடையே தொடரும் உட்கட்சி பூசல் - முதல்வர் பிறந்தநாள் விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டு கழிவு நீரோடையில் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் சூழலில், முன்னதாக, பிறந்தநாள் விழாவின் போது, பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்வரின் அறிக்கைக்கு கட்டுப்படாத திமுகவினர், ஆங்காங்கே முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்தநாள் விழாவினை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர பகுதியில் கடையநல்லூர் தற்போதைய நகர செயலாளர் அப்பாஸ் தரப்பினர் ஒரு ஸ்பேனரும், முன்னாள் நகர செயலாளர் சேகனா ஒரு ஸ்பேனரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை விழாவினை முன்னிட்டு வாழ்த்துக் கூறி மணிக்கூண்டு அருகே ஸ்பேனர் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மணிக்கூண்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நகர செயலாளர் சேகனாவின் ஸ்பேனரை மர்ம நபர்கள் கிழித்து அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் போட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் நகர செயலாளரின் ஆதரவாளர்கள் நாங்கள் வைத்த ஸ்பேனரை யார் கிழித்தார்கள் என பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் திமுகவினர் உட் கட்சி பூசல்களால் ஒருவரை ஒருவர் வசைப்பாடி கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில், தற்போது முதல்வர் பிறந்த நாள் விழாவிற்கு வாழ்த்து சொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பேனர் கிழிக்கப்பட்டு கழிவு நீர் ஓடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :