கன மழை- வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி
தென்மேற்கு பருவமழை டெல்லியில் தாமதமாக துவங்கினாலும் தற்போது கொட்டித் தீர்த்து வருகிறது. டெல்லியின் பல பகுதிகள் கனமழையால் வெள்ளக்காடாக மாறி உள்ளது. குர்கான், பரிதாபாத் பகுதிகளில் பருவமழை கொட்டி வருகிறது.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதமே தொடங்கினாலும் தமிழகம், கேரளா, கர்னாடகா, மகாராஷ்டிராவில் பருவமழை சீராக பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் பருவமழை தாமதமாகவே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.வானிலை மையம் கணித்தது போலவே நடப்பாண்டு 16 நாட்கள் தாமதமாக பருவமழை தொடங்கியுள்ளது.
டெல்லி, குருகிராம், நொய்டா, பரிதாபாத், அரியானாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை முதலே கனமழை கொட்டித்தீர்த்தது. தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பருவமழை தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பருவமழை நடப்பாண்டு தாமதமாகத் தொடங்கினாலும் முதல்நாளிலேயே கனமழையாக கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
Tags :