சங்கரன்கோவில் ஆடித்தபசு  திருவிழா கொடியேற்றம்!

by Editor / 13-07-2021 04:58:16pm
சங்கரன்கோவில் ஆடித்தபசு  திருவிழா கொடியேற்றம்!

 

தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில். இங்கு ஆடித்தபசு பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் . கடந்த ஆண்டு தபசுத் திருவிழா கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. தற்போதும் இரண்டாவது அலை நீடிப்பதால் இந்த ஆண்டும் தபசுத் திருவிழாவை கோவில் நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இந்த ஆண்டுக்கான ஆடித்தபசுத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து பின்னர் பச்சை பட்டுடுத்தி மலர்கள் மற்றும் நாற்றுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.இதையடுத்து வருகின்ற 23 ஆம் தேதி ஆடித்தபசு திருவிழாவானது திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி கோவிலின் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் திருக்கோவிலுக்குள் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் 50 நபர்கள் மட்டுமே அனுமதி செய்யப்படுவார்கள் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில் கொடியேற்ற விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா உள்பட மண்டகப்படி தாரர்கள் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via