இரு வெவ்வேறு தடுப்பூசிகளை  போட்டுக் கொள்வது ஆபத்தானது உலக சுகாதார அமைப்பு

by Editor / 13-07-2021 05:02:58pm
இரு வெவ்வேறு தடுப்பூசிகளை  போட்டுக் கொள்வது ஆபத்தானது உலக சுகாதார அமைப்பு



இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது என்பது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது.
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது.
இது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:-
கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via