மீண்டும் நேபாள பிரதமரானார் ஷேர் பகதூர் துபா

by Editor / 13-07-2021 06:26:37pm
 மீண்டும் நேபாள பிரதமரானார்  ஷேர் பகதூர் துபா

 

 

.நேபாள பார்லிமென்டுக்கு 2017ல் தேர்தல் நடந்தது. இதற்கு பின், சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. இந்நிலையில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. அதன்பின் கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக இரட்டை தலைமை பிரச்னை ஏற்பட்டது. சர்மா ஒலி மற்றும் பிரசந்தா தலைமையில் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டனர்.தடை விதித்தது கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையை கலைத்து, முன்னதாகவே தேர்தல் நடத்த, சர்மா ஒலி திட்டமிட்டார். அதை ஏற்று, பார்லி.,யை கலைத்து, அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.மேலும் இந்தாண்டு ஏப்., 30 மற்றும் மே 10ம் தேதிகளில் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பார்லி.,யை கலைக்கும் முடிவுக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, பிப்., 23ல் பார்லிமென்ட் மீண்டும் அமைக்கப்பட்டது.இதற்கிடையே, பார்லி., யில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, சர்மா ஒலி கொண்டு வந்தார்; அதில் தோல்வி அடைந்தார்.இதன்பின் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று, பார்லி.,யை கலைக்க, மே 22ல் அதிபர் உத்தரவிட்டார். மேலும், நவ., 12 மற்றும் 19ல் முன்னதாகவே தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது.ஐந்து மாத இடைவெளியில், பார்லிமென்ட் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து, முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.பிரதிநிதிகள் சபை இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சோலேந்திர சம்ஷெர் ரானா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பு அளித்தது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:மொத்தம், 275 உறுப்பினர்கள் உள்ள பிரதிநிதிகள் சபையை மீண்டும் அமைக்க வேண்டும்.புதிய பிரதமராக, நேபாள காங்., தலைவர் ஷேர் பகதுார் துபாவை, 28 மணி நேரத்துக்குள் நியமிக்க வேண்டும். வரும் 18ம் தேதி, பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, நேபாள அரசியல்சாசன சட்டம், 76(5) பிரிவின் கீழ், நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதுார் துபாவை பிரதமராக நியமித்து அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டு உள்ளார். 74 வயதாகும் ஷேர் பகதுார் துபா, 5வது முறையாக விரைவில் பதவியேற்க உள்ளார். இதற்கு முன் 2017 ஜூன் முதல் 2018 பிப் வரையிலும், 2004 ஜூன் முதல் 2005 பிப் வரையிலும், 2001 ஜூலை முதல் 2002 அக்., வரையிலும், 1995 செப்., முதல் 1997 மார்ச் வரையிலும் பிரதமராக ஷேர் பகதுார் துபா பதவி வகித்து உள்ளார். பிரதமராக பதவியேற்ற 30 நாட்களுக்குள் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை ஷேர் பகதுார் துபா நிருபிக்க வேண்டும்.

 

Tags :

Share via