கொரோனா விதிமுறை மீறிய இந்தியருக்கு 9 மாதம் சிறை
கொரோனா விதிமுறைகளை மீறிய இந்திய இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்தது.
ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பாலசந்திரன் பார்த்திபன் 26 என்பவர் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. சிங்கப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதன் முடிவு வருவதற்குள் மருத்துவமனையை விட்டு புறப்பட்டார். அங்கிருந்து ஷாங்கி விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து இந்தியா செல்ல டிக்கெட் எடுக்க முயற்சித்தார். டிக்கெட் கிடைக்கவில்லை.இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் தீவிரமாக தேடி விமான நிலையத்தில் பார்த்திபனை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்த பார்த்திபன் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டார். அங்கிருந்தும் வெளியேறிய அவர் மீண்டும் விமான நிலையம் சென்றார்.அப்போதும் அவருக்கு இந்தியா செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. அன்று இரவு விமான நிலையத்திலேயே தூங்கிய பார்த்திபன் மறுநாள் உறவினர் வீட்டுக்குச் சென்றார்.அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மீண்டும் பார்த்திபனை பிடித்து ஒரு விடுதியில் தனிமைப்படுத்தினர். இதற்கிடையில் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் கொரோனா விதிமுறைகளை மீறிய பார்த்திபனுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
Tags :