இலவச திட்டங்களால் தமிழகம் பின்தங்கவில்லை! - அமைச்சர் பி.டி.ஆர்

by Editor / 19-07-2021 01:10:25pm
இலவச திட்டங்களால் தமிழகம் பின்தங்கவில்லை! - அமைச்சர் பி.டி.ஆர்

ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதி உதவியுடன் `தாலிக்குத் தங்கம்' திட்ட விழா மதுரையில் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தியுடன் கலந்து கொண்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ``திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே பெண்களுக்கு கல்வி, சொத்து, வேலைவாய்ப்பு அனைத்திலும் சம உரிமையையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதுதான். உலகில் எங்கெல்லாம் அத்தகைய உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டதோ அங்கு சமுதாயம் சிறப்பான நிலையில் முன்னேறி இருக்கிறது.

நூறாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வாக்குரிமை, கட்டாய ஆரம்பக்கல்வி ஆகியவற்றை அளித்து பெருமை சேர்த்தது திராவிட இயக்கத்தின் தூணாகத் திகழ்கின்ற நீதிக்கட்சி. இது நிகழ்ந்தது 1920-ம் ஆண்டில்.எப்போதெல்லாம் திராவிடக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக் கொள்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்ந்திருக்கிறது. பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் கல்வியறிவு பெறாத நிலை இல்லை. ஆனால், வட மாநிலங்களில் 30 சதவிகிதம் பெண்கள்தான் 18 வயதுக்குக் கீழ் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.2,50,000 என்றால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அது ரூ.75,000-ஐ தாண்டவில்லை. ஆகையால்தான் இதுபோன்ற திட்டங்களை அதிகரித்து வருகிறோம்.

இடையில் சில காலம் தடைபட்டிருந்த இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் மீண்டும் தொடங்கியுள்ளன.பொதுவாக இலவசத் திட்டங்களால் தமிழக அரசியல் பின்தங்கி விட்டதாகத் தவறான தகவல்களை சிலர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் இலவசத் திட்டங்கள் மட்டுமல்ல, சமூக நீதியையும் பொருளாதார வளர்ச்சியையும் மனதில் கொண்டு மனிதநேயத்துடன் நிறைவேற்றப்படும் இத்திட்டங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

அதனால்தான் வட மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு சமூக நீதி திட்டங்களில் முதன்மையாக விளங்குகிறது. இதனை இன்னும் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இருந்து, பல தலைமுறைகளாக சமூக நீதி திட்டங்களை நிறைவேற்றி வரும் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் இந்த நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

 

Tags :

Share via