கடுமையாக எச்சரித்திடுக: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் சாதி இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பிளஸ்2 படித்து வரும் மாணவனை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அதுகுறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவனை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், தனது சகோதரனை காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Tags :