5 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் மீது வழக்கு

by Staff / 15-10-2023 04:42:39pm
5 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் மீது வழக்கு

திண்டுக்கல்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் பெற்று தருவதாக, 5 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் மீது, திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கொளத்துாரை தலைமையிடமாக கொண்ட அப்ரோ டிரஸ்ட், ஐ. பி. இ. இ. , பவுண்டேஷன் நிறுவனங்களை, சென்னையைச் சேர்ந்த யேசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார்.அதில் மக்கள் தொடர்பு அலுவலராக கிரிஜா செயல்பட்டார். இந்நிறுவனம் தமிழகம் முழுதும் கிளைகளை துவங்கி, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் பெற்று தருவதாக விளம்பரம் செய்தது. இதில், திண்டுக்கல் கிளை மேலாளராக பணியாற்றும் தாடிக்கொம்பு சாலையைச் சேர்ந்த ஆனந்தி, பணியாளர்கள் பாண்டீஸ்வரன், தமிழ்குமரன் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி, முன் பணமாக, 5 கோடி ரூபாய் வரை வசூலித்து, யேசுதாஸ், கிரிஜா வங்கி கணக்கிற்கு செலுத்தினர். ஆனால், கடன் பெற்று தரவில்லை.ஆனால், கடன் பெற்று தரவில்லை. மேலாளர் ஆனந்தி, திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். யேசுதாஸ், கிரிஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடுகின்றனர். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், ஆவணங்களுடன், திண்டுக்கல், நேருஜி நகர் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via