40 நாட்கள் காலை..மாலை நேரங்களில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன்.

by Editor / 04-11-2023 09:44:17pm
 40 நாட்கள் காலை..மாலை நேரங்களில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன்.

சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்துள்ளனர். அந்த வழியாக தனது வாகனத்தில் சென்ற பாஜக நிர்வாகியும் , நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தை வழிமறித்து படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை மிரட்டி, பேருந்தில் இருந்து இறங்கச்செய்து அவர்களை தாக்கியதோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களை ஒருமையில் பேசியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஞ்சனா நாச்சியாரின் செயலை படம் பிடித்த நபர் சமூக வலைத் தளத்தில் அதனை பதிவேற்றம் செய்யவே நாடுமுழுவது இந்த வீடியோ பரவியது. பலர் அவரது செயலுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பதிவுகளை வெளியிட்ட நிலையில் மாங்காடு போலீசார் இன்று காலை ரஞ்சனாவை கைது செய்தனர். ரஞ்சானாவை கைது செய்த போலீசார் ஸ்ரீபெரும்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது ரஞ்சனா ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ராம்குமார் விசாரணை செய்தார்.

நடிகை ரஞ்சானா தரப்பில் மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை அடித்ததாகவும்,உயிர் சேதத்தை தவிர்க்கவே தாய் போன்று வாக்குவாதம் செய்ததாகவும்,சாலையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் தனது செயலை பாராட்டியதாகவும், படியில் பயணம் செய்தவர்களை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் காவல்நிலையத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் குற்றங்களை மறைக்கவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார் ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா..? என்று காட்டாமாக கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து நடிகை ரஞ்சானா 40 நாட்கள் காலை..மாலை நேரங்களில் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


 

 

Tags : நடிகை ரஞ்சானா

Share via