ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் நில அளவை பிரிவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக் கண்ட அங்கு பணிபுரியும் காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஆவணங்கள் ஏராளமாக எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்தும், சேதமடைந்த ஆவணங்கள் குறித்தும் கேணிக்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கட்டிடத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்த்தளத்தில் இயங்கி வந்த கல்வி அலுவலர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :