கால்வாய்கள் பராமரிக்கப்படாததால் பி.ஏ.பி.,பாசன நீர் விநியோகத்தில் சிக்கல்

by Admin / 30-07-2021 02:38:10pm
கால்வாய்கள் பராமரிக்கப்படாததால் பி.ஏ.பி.,பாசன நீர் விநியோகத்தில் சிக்கல்


   
இரு கரைகளும் பலமாகும் வகையில் கம்பி கட்டி கான்கிரீட் கரைகளாக மாற்ற ரூ.100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது.

பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து 6 மாதத்திற்கு ஒருமுறை நீர் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 3-ந்தேதி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாசன நிலங்களுக்கு தேவையான நீர், திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து 126 கி.மீ., நீளமுள்ள பிரதான கால்வாய் வாயிலாக  பாசன நிலங்களுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் பாசன ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
 
அதிலும் அணையில் இருந்து தீபாலபட்டி வரை முதல் 7 கி.மீ., பகுதி கால்வாயின் இருபுறமும் காணப்படும் கரிசல் மண் காரணமாக கரைகள் உடைந்தும், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டும் வருகிறது. இரு கரைகளும் பலமாகும் வகையில்  கம்பி கட்டி கான்கிரீட் கரைகளாக மாற்ற ரூ.100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது.

ஆனால் 5 ஆண்டுக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுபறியாகி வருகிறது. மேலும் கால்வாயின் பல இடங்களில் கான்கிரீட் கரைகள் உடைந்தும், சிலாப்கள் பெயர்ந்தும், மண் அரிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. மழை காலத்தில் 4-ம் மண்டல பாசனம்  தொடங்கும் நிலையில் 5 சுற்று தண்ணீர் தடையில்லாமல் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017-ல் பாசன காலத்தில், கரைகள் உடைப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நீர் வழங்க முடியவில்லை. கடந்த  இரண்டாம் மண்டல பாசனத்தின் போதும் கன மழை காரணமாக  இருமுறை உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டுதோறும் தொடரும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். தற்போது தொடங்கும் நான்காம் மண்டல பாசனத்தில்  தடையில்லாமல் நீர் வினியோகம் செய்யும் வகையில்  உடைப்பு ஏற்படாமல் தற்காலிக பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளதால் சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள், பிரதான கால்வாய், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களில் மடைகள் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

பிரதான கால்வாயில் முழுமையாக பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.

 

Tags :

Share via