பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா..(தொகுப்பு).

by Editor / 15-02-2024 10:34:41am
பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா..(தொகுப்பு).

பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா..

 
மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியான சித்தர்கள் வாழும் பூமியாகவும்,மாண்டவர்களை உயிர்பெற வைக்கும் மூலிகைகள் நிறைந்த பொதிகை மலைபல்வேறு சிறப்புக்களை பெற்றது.சித்தர்கள் நிறைந்த தென்னிந்திய தேசம்.அடர்ந்த வனப்பாகுதியாக விளங்கும் பொதிகைமலையின் உச்சியில் மேகங்கள் தாலாட்டி..மழைத்துளிகள் குளிர்வித்து அனைவருக்கும் அருள்பள்ளிக்கும் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் குறுமுனிவரான திருமுனிவர் அய்யன் அகத்தியரை வழிபட நம் முன்னோர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம்... திருவனந்தபுரம்...  வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. (பாபநாசம் வழியாக மலைவழிச்சாலையில் திருவனந்தபுரத்திற்கு பேரூந்துக்களை இயக்க பாதைகள்  அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபபட்ட நிலையில் அதனை பல்வேறு காரணங்களை கட்டி அந்தத்திட்டத்திற்கும் வனத்துறை தடை விதித்ததாக தகவல்கள் உண்டு பாபநாசம் வழியாக திருவனந்தபுரம் செல்ல அதிகபட்சமாக வெறும் 40 கிலோ மீட்டர் தொலைவுதான் என்ற தகவலும் உண்டு).

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று பயணம் துவங்கலாம். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன்... மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.
முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும். 

அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை  அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும்.  இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.)

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை... என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு  (ரோப்) பிடித்துக் கொண்டு  கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.
அங்கு சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த நிலையில் இருக்கும் சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து,  பிறவி பயனை அடைந்த பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படுவதை .மறுக்கமுடியாது.மறக்கவும் .முடியாது.மீண்டும்..மீண்டும் அந்த திருநீரால் நின்ற நிலையில் காட்சியளிக்கும் குறுமுனிவரின் தோற்றம் இதயத்தில் நீங்காத இடத்தில் குடியிருந்துவிடும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியரை வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கயிறுகளின் உதவியோடு கீழே இறங்கத் தொடங்கி... மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு  ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், இவையெல்லாம் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்.  உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 41 நாட்கள் விரதமிருந்து பெருவழிப்பாதையில் தங்கியிருந்து பயணிக்கும் அனுபவம் அய்யன் குறுமுனிவரை தரிசிக்க செல்லும் இந்த பாதையில் நமக்கு இங்கே கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முனியை தரிசிக்க ஜனவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைபெறலாம்.  இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவு வனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின்போதும் வைத்திருக்க வேண்டும்.  அற்புதங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களை... காணக்கிடைக்கும் ஒரு புதிய பயண அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால்... நீங்கள் பொதிகைக்கு கிளம்பி விடலாம். யாத்திரை செல்ல.... www.forest.kerala.gov.in என்ற முகவரியில்..  புக் செய்யலாம்.

பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா..(தொகுப்பு).
 

Tags :

Share via