திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

by Staff / 10-03-2024 01:34:18pm
திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது மத்திய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பாஜக அரசானது, நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. இதனை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கை நடைபெற்றது.

பாஜகவை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசானது மக்களாட்சி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டது. அகில இந்தியக் கட்சிகள், மாநிலங்களை ஆளும் கட்சிகள், மாநிலங்களை ஆண்ட கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் அணியைத் தொடங்கினோம்.

 

Tags :

Share via

More stories