1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுப்பு

by Admin / 05-08-2021 04:01:33pm
1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுப்பு



   
உத்திரமேரூர் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே கண்டெடுக்கப்பட்ட சப்த மாதர்கள் சிற்பத்தொகுப்பு
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-
 
நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத்தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1½ அடி உயரம், 4½ அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும்.

இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள். முதலில் பிராமியும், 2-வதாக மகேஸ்வரியும் 3-வதாக கவுமாரியும் 4-வதாக வைஷ்ணவியும் 5-வதாக வராகியும் 6-வதாக இந்திராணியும், 7-வதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள்.

பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை. இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள். ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும்.

இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். உலகெங்கிலும் தாய் தெய்வ வழிபாடு என்பது நீக்கமற நிறைந்துள்ளது.

வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ, வெற்றியின் அடையாளமாக மன்னர்கள் நாட்டை வென்றிட இன்ன பிற நன்மைகள் வேண்டி மன்னர் முதல் மக்கள் வரை வழிபட்டது தாய்வழி வழிபாடாகும்.

இதன் முதல் வழிபாடாக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக இந்த எழுவர் அன்னையர் வழிபாடு உள்ளது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக இந்த எழுவர் கன்னியர் வழிபாடு தொடர்கிறது. காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் போன்ற நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காண கிடைக்கின்றன. கி.பி. 6-ம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்ற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த குறிப்புகள் உள்ளது.

நாங்கள் கண்டெடுத்த இந்த புடைப்பு சிற்பதொகுப்பானது சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கி கொண்டிருக்கும் இந்த பக்தி வரலாற்று கலைபொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via