மதுரை-போடி அகல ரெயில்பாதையில் ரெயில் என்ஜினை அதிவேகத்தில் இயக்கி சோதனை

by Admin / 05-08-2021 04:00:50pm
மதுரை-போடி அகல ரெயில்பாதையில் ரெயில் என்ஜினை அதிவேகத்தில் இயக்கி சோதனை

 


   
மதுரை-போடி அகல ரெயில் பாதையில் ஆண்டிப்பட்டி-தேனி இடையே அதிவேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை-போடி அகல ரெயில்பாதையில் ரெயில் என்ஜினை அதிவேகத்தில் இயக்கி சோதனை
ஆண்டிப்பட்டி-தேனி இடையே அதிவேகத்தில், ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரெயில் போக்குவரத்து
தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்த இந்த ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக, இந்த ரெயில் பாதையில் இயக்கப்பட்ட ரெயில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரெயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட போதிலும் பணிகள் சில ஆண்டுகள் முடங்கிக் கிடந்தன.
 
மக்களின் பல்வேறுகட்ட போராட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு இந்த ரெயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தியது. இதையடுத்து ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது.

முதற்கட்டமாக உசிலம்பட்டி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம் நடந்தது.

தேனி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ரெயில் என்ஜின் மிக மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரெயில்வே தண்டவாளங்கள் இணைப்பை ஆய்வு செய்யும் வகையில் அந்த சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து பணிகள் நடந்த நிலையில், தேனி வரை பணிகள் முழுமை பெற்றுள்ளன.

இதையடுத்து ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு நேற்று ரெயில் என்ஜின் வந்தது. அந்த என்ஜின் காலை 11 மணியளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து புறப்பட்டது. 30 கிலோமீட்டர் வேகத்தில் அந்த என்ஜின் தேனி ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஆண்டிப்பட்டி நோக்கி சென்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

ரெயில் என்ஜின் தேனிக்கு வந்ததால், ரெயில்வே சந்திப்பு சாலை பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் திரண்டு நின்று ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி ரெயில் நிலையத்திலும் பொதுமக்கள் பலர் வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு கருதி ரெயில்வே பாதை சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனியில் ரெயில் என்ஜின் வரும் போது ரெயில்வே கேட்டுகள் அடைக்கப்பட்டன.

அப்போது, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. என்ஜின் சோதனை ஓட்டத்தை தொடர்ந்து விரைவில் பெட்டிகளுடன் கூடிய ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

 

Tags :

Share via