ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

by Admin / 13-04-2024 11:44:10pm
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் : கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ  செண்பகவல்லி அம்மன் - ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில்  பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.ஒன்பதாம் திருவிழாவான இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் . இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க முதலில் அம்பாள் தேர் அதைத் தொடர்ந்து சுவாமி தேர் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பத்தாம் திருநாளான நாளை 14ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 15-ந்தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.  தேரோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்
 

Tags :

Share via