உடுமலை அருகே ஜாமீனில் வந்த தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடி மாத வழிபாட்டிற்காக ராமன் பூச்சிமேடுக்கு வந்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதிநகர் பூச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 47) தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு ராமனுக்கு சிறை தண்டனை வழங்கியது.
இதையடுத்து சிறையில் இருந்து வந்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். ஊருக்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பதால் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடி மாத வழிபாட்டிற்காக பூச்சிமேடுக்கு வந்திருந்தார். இதையறிந்த மாரிமுத்துவின் அண்ணன் மகன் பிரபாகரன் (22) என்பவர் ராமனிடம், எனது சித்தப்பாவை கொலை செய்து விட்டு, ஊரில் நீ ஜாலியாக சுற்றுகிறாயா? என்று கேள்வி கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரத்தில் ராமனை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டினார். இதில் ராமனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அமராவதிநகர் போலீசார் விசாரணை நடத்தி பிரபாகரனை கைது செய்தனர்.
Tags :