500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு ரூ.10 கோடி மோசடி. 

by Editor / 27-06-2024 10:37:45pm
500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு ரூ.10 கோடி மோசடி. 

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை பசுமை சங்கம் என்ற பெயரில் கமிஷன் மண்டி நடத்தி வந்தவர் ஜெய்கணேஷ். இவர் கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளிடமிருந்து நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட விலை பொருட்களை பெற்று விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வந்தார்.

திருவண்ணாமலை மட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம், சோமாசிபாடி, கீழ்பென்னாத்தூர், ஏந்தல், கச்சிராப்பட்டு, வடமாத்தூர், அணைக்கரை, காட்டாம்பூண்டி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த மார்ச் மாதம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை விவசாயிகளிடம் வழங்காமல் தொடர்ந்து அலைகழித்து வந்ததுடன், தற்பொழுது கமிஷன் மண்டியை மூடிவிட்டு தலைமறைவாக உள்ளதாகவும் அவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

தங்கள் கிராமங்களில் உள்ள சிலரிடம் ஜெகதீசன் நெல் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை வழங்கியதால் ஆசைப்பட்டு தாங்களும் ஜெகதீசனிடம் தொடர்ந்து நெல் விற்பனை செய்ததாகவும், ஆனால் தற்பொழுது 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு பணம் தராமல் அலைகழித்து வந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை அவரிடம் சென்று கேட்ட பொழுது ஒவ்வொரு விவசாயிக்கும் காசோலை வழங்கியதாகவும், ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதாகவும், மீண்டும் சென்று பணம் கேட்டால் நான் ஏமாற்ற மாட்டேன் பணம் திரும்பத் தருகிறேன் என்று கூறி தனது அலைபேசியை அனைத்து வைத்துள்ளதாகவும் கூறினர்.

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் ஆகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதாகவும், விவசாயிகளுடைய நெல்லை பெற்றுக்கொண்டு 10 கோடிக்கு மேல் பணம் தராமல் தலைமறவாகியுள்ள ஜெகதீசனை கைது செய்து அவரிடம் இருந்து விவசாயிகள் பணத்தை மீட்டுதர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட நெல் உள்ளிட்ட விளைபொருட்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுத்து பணம் பெற்று வந்த நிலையில் கமிஷன் மண்டி வைத்து மூட்டைக்கு 300 ரூபாய் வரை அதிகம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விவசாயிகளிடம் ஜெய்கணேஷ் ஏமாற்றி தலைமறைவாகியுள்ளது விவசாயிகளிடம் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags : 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு ரூ.10 கோடி மோசடி. 

Share via