பக்தர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் வீடியோ காட்சி பரவியதால் பரபரப்பு.

by Editor / 25-07-2024 06:04:28pm
 பக்தர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும்  வீடியோ காட்சி பரவியதால் பரபரப்பு.

திருவண்ணாமலை பௌர்ணமி தினத்தின் போது கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் ஆசீர்வாதம் செய்துவிட்டு அவர்களின் பாக்கெட்டில் இருந்து திருநங்கைகள் பணம் எடுக்கும் வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது. சனிக்கிழமை இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர். 

குறிப்பாக மாதா மாதம் வரும் பௌர்ணமி தினத்தின் பொழுது வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திருநங்கைகளின் வருகை அதிகப்படியாக இருந்து வருகிறது. 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கு நின்று கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களின் தலையில் திருநங்கைகள் கைவைத்து பத்து ரூபாய் இருபது ரூபாய் என வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் கிரிவலம் வந்த போது அத்துமீறி பக்தர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக கிரிவலப் பாதை இடுக்கு பிள்ளையார் கோவில் அருகே மூன்று திருநங்கைகள் கிரிவலம் வரும் பெண் பக்தர்கள் மற்றும் ஆண் பக்தர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தடுத்து நிறுத்தி தலையில் கை வைத்து அராஜகமாக பணத்தை வசூல் செய்தனர். இருப்பினும் ஆண் பக்தர்களிடம் கேட்காமல் அவர்களின் தலையில் கை வைத்த பிறகு அவர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் செயலிலும் ஈடுபட்டனர். 

மன அமைதிக்காகவும், குடும்பம் மேலோங்க உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை வைத்துக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களை அராஜகமாக தடுத்து நிறுத்தி இது போன்ற செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

Tags :

Share via