இல்லத்தரசிகளை குறி வைத்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து லட்சக்கணக்கில் சுருட்டிய நபர்.

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கம்பர் தெரு பகுதியில் ஸ்ரீ அம்பாள் டிரேடர்ஸ் என்கிற பெயரில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தவர் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவர் சமூக வலைதளங்களிலும் துண்டறிக்கைகள் மூலமும் இல்லத்தரசிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களை குறி வைத்து குறைந்த முதலீட்டில் மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.வீட்டிலிருந்தபடியே கப் சாம்பிராணி செய்து கொடுக்க வேண்டும் அதனை உங்கள் இடத்திற்கே வந்து எடுத்துக் கொள்வோம்.மூன்று வருட ஒப்பந்தம் போடப்படும்.நீங்கள் கட்டிய டெபாசிட் தொகை 5000 ரூபாய் திருப்பி தரப்படும் என்பது போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு திருவாரூர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும்படி கொண்டு சேர்த்துள்ளார்.
இதனை நம்பி திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் சேங்கனூர் பழையனூர் பிலாவடி நாச்சியார் கோயில் வலங்கைமான் காரியாப்பட்டினம் பூங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இல்லத்தரசிகள் 5000 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தி இதில் இணைந்ததுடன் பிற பெண்களை சேர்த்து விட்டால் ஒரு கிலோ கப் சாம்பிராணி மூலப் பொருளுக்கு பத்து ரூபாய் கமிஷன் தருகிறோம் என்று சொன்னதன் அடிப்படையில் பலரையும் தங்களது சிபாரிசின் பெயரில் இதில் இணைத்துள்ளனர்.மேலும் இந்த விளம்பரத்தில் மூலப்பொருள் இலவசமாக வழங்கப்படும் கப் சாம்பிராணி செய்வதற்கான அச்சு வழங்கப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் அச்சு கொடுக்கப்பட்டு சிலருக்கு மூலப் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு கிலோ மூலப் பொருளுக்கு கப் சாம்பிராணி செய்து கொடுத்தால் 30 ரூபாய் கிடைக்கும் என்றும் நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிலோ வரை உங்களுக்கு மூலப் பொருள் வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ரமேஷ் அந்தந்த கிராமங்களுக்கும் சென்று இல்லத்தரசிகளை மூளைச் சலவை செய்துள்ளார்.இதனையடுத்து சில நாட்கள் மட்டுமே மூலப்பொருட்கள் கொடுத்த நிலையில் பெண்கள் ரமேஷை தொடர்பு கொண்டு கேட்டபோது அலுவலகத்திற்கு நேரில் வரும்படியும் உங்களுக்கு 6000 ரூபாய் அட்வான்ஸ் தொகை தருகிறேன் என்றும் அதனை தங்கள் சம்பளத்தில் வாரம் 500 ரூபாய் என்று பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி டெபாசிட் கட்டியவர்கள் அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. அங்கு பணியில் இரண்டு பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர்.ரமேஷை தொடர்பு கொண்ட போது அவரது இரண்டு மொபைல் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு உரிய நடவடிக்கை எடுக்க முன் வராத நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் டெபாசிட் கட்டி ஏமாந்திருப்பதாகவும் அவர் கொடுத்திருக்கும் அச்சு ஆயிரம் ரூபாய் மதிப்பு மட்டுமே இருக்கும் என்றும் பணம் கட்டி ஏமாந்த பெண்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.மேலும் லட்சக்கணக்கில் அவர் பணத்தை சுருட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Tags : 5000 ரூபாய் டெபாசிட் கட்டி ஏமாந்த பெண்கள் மனு .