தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் இவர் அதே பகுதியை சேர்ந்த சேர்மதுரை என்பவரிடம் ரூபாய் 13 லட்சத்து 50 ஆயிரம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு கொடுத்ததாகவும் ஆனால் இதுவரை அவர் வேலையும் வாங்கி தரவில்லை கொடுத்த பணத்தையும் தரவில்லை என்று காவல் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு வருகை தந்து மனு அளிப்பதற்கு வரிசையில் நின்றுள்ளார் பின்னர் அவர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க இருந்த நிலையில் ஆட்சியர் முன் திடீரென தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தீக்குளிக்க முயன்ற அல்போன்ஸை பாதுகாப்பாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து வெளியே அழைத்து வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். கலெக்டரின் முன்னே தீக்குளிக்க முயன்ற முதியவரால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட முதியவர் விசாரணைக்காக தென்காசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறைதீர்க்கும் நாள் முகாமின் போது 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை சோதனை செய்து அனுப்பி வந்த நிலையில் முதியவர் எப்படி மன்னனை கேனை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிற்குள் எடுத்து வந்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மெத்தனமாக இருந்த காவல்துறையினரை ஆட்சியர் கமல் கிஷோர் கடுமையாக எச்சரித்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் வேறு ஒரு இளம் பெண் பெட்ரோல் பாட்டிலுடன் அலுவலகத்திற்கு நுழைய முயன்றார் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர் காவல் துறையினர் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை தென்காசி எஸ்பி சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்.