தரமான விவாதமின்றி சட்டங்கள் இயற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!
நாடாளுமன்றத்தில் தரமான விவாதங்களின்றி சட்டங்கள் இயற்றப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, விவாதங்கள் இன்றி சட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக குறை தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் செயல், வழக்குகள் அதிகரிக்க வழிவகுப்பதாகவும் அவர் கூறினார். தரமான விவாதங்கள் இல்லாமல் இயற்றப்படும் சட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்ள இயலாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நாடாளுமன்றத்தில் அந்த குறைபாட்டிற்கு வழக்கறிஞர்கள் இல்லாததே காரணம் என குறிப்பிட்டார்
. நாட்டில் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டவல்லுநர்களே உறுப்பினர்களாக இருந்ததாகவும் ரமணா நினைவு கூர்ந்தார்.
தற்போது இயற்றப்படும் சட்டங்களில் தெளிவற்ற தன்மை நிலவுவதாக கவலை தெரிவித்த அவர், இதனால் மக்களுக்குதான் பேரிழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்
. எனவே சட்டவல்லுநர்கள் அனைவரும் சட்டத்திற்கு மட்டும் உட்பட்டு பணிகளை செய்யாமல், சட்ட அறிவை பயன்படுத்தி மக்களின் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இதுவரை போதும் என்கிற நிலையை நாம் எட்டவில்லை என கூறியுள்ளார்.
Tags :