நெல்லை, குமரி,  தூத்துக்குடியில்  16 தூண்டில் வளைவு- கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

by Editor / 24-08-2021 04:30:12pm
 நெல்லை, குமரி,  தூத்துக்குடியில்  16 தூண்டில் வளைவு- கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு



 நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டங்களில் 16 தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படும்  என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தமிழக சட்டசபையில்நடந்த நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் இறுதியாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-


அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள் மற்றும் காவேரிபாக்கம் ஏரி ஆகியவற்றின் கொள்ளளவை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ், 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும். தமிழக அரசின் தலைநிமிரும் தொலைநோக்கு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படையில், 31 மாவட்டங்களில், 17 வடிநிலங்களை சார்ந்த 207 ஏரிகள், கண்மாய்கள், வழங்கு வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள், குளங்கள் மற்றும் அவற்றின் கட்டுமானங்கள் நபார்டு நிதியுதவியுடன் படிப்படியாக புனரமைக்கப்படும்.


புதிய, பெரிய நீர் ஆதார திட்டங்களுக்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரிவான மதிப்பீடு தயாரிக்க 7 புதிய திட்டங்களுக்கான ஆய்வு பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த ஆண்டு சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 50 குறுநீர்ப்பாசன குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
பருவ காலங்களில் மிகக்குறைந்த நாட்களே கிடைக்கும் மழை நீரை திறம்பட சேமிக்க ஏதுவாக, வேலூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 3 புதிய குளங்கள் அமைக்கவும், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 5 புதிய கால்வாய்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், நீர்வளத்துறையின் பணிகளை நவீனமயமாக்குவதற்காக, நீர்வள ஆதார பராமரிப்பு கோட்டங்களுக்கு 69 நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படும்.
புயல் மற்றும் பெருமழை காலங்களில் மீனவர் மற்றும் மீனவ கிராமங்களுக்கு ஏற்படும் இன்னல்களை களையும் பொருட்டு, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டங்களில் 16 தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


சிறு உப வடிநிலங்கள் நீர்த்தேவை யில் தன்னிறைவு அடையும் விதமாக, அனைத்து விதமான நீர்செறிவு கட்டுமானங்களை ஒருங்கே அமைக்கும் பணிக்கு, முதற்கட்டமாக 8 உப வடிநிலங்கள் தெரிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துறையில் பயன்பாட்டில் இருந்துவரும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும். தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பணியாளர்களில் 10 வருடங்களாக தினக்கூலி பட்டியலில் இடம்பெற்று, தற்போதுவரை பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களின் பணியை அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் பணி வரன்முறை செய்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via