தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்:தனியார் மருத்துவமனைக்கு 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை.

by Editor / 24-10-2024 04:11:20am
தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்:தனியார் மருத்துவமனைக்கு 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார். இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

அறுவை சிகிச்சை நடைபெற்ற அறைக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

Tags : தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்:தனியார் மருத்துவமனைக்கு 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை.

Share via