விபத்தில் பலியான 2 சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Editor / 01-11-2024 11:46:01am
விபத்தில் பலியான 2 சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) நேற்று மாலை அங்கலக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) நேற்று அதிகாலை சுமார் 1 மணியள வில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இரும்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.சரவணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : விபத்தில் பலியான 2 சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி: மு.க.ஸ்டாலின் உத்தரவு

Share via