பேருந்து நிலையத்தை கூறு போட்டு விற்பனை செய்ய நகர் மன்ற தலைவர் முயற்சி-துணைத்தலைவர்  குற்றசாட்டு.

by Editor / 08-11-2024 10:16:08am
பேருந்து நிலையத்தை கூறு போட்டு விற்பனை செய்ய நகர் மன்ற தலைவர் முயற்சி-துணைத்தலைவர்  குற்றசாட்டு.

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியில் கடைகள் கட்டப்பட்டு நகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளதாக நகராட்சி துணைத்தலைவர் கே.என்.எல் சுப்பையா  நகர் மன்ற தலைவர் சாதிரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கமல் கிஷோரிடம் நகர மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் முன்புறம் உள்ள 30 அடி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் மக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை தாங்களாகவே வாடகைக்கு விட்டுள்ளனர். இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கண்டு கொள்ளாமல் புதிய பேருந்து நிலையத்தை கூறு போட்டு விற்க முயற்ச்சித்து வருகிறார். மேலும் நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்புக்காக லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் நகர்மன்ற தலைவரும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.

தென்காசி நகராட்சியில் நகர்மன்ற தலைவரும் துணைத் தலைவரும் திமுகவை சேர்ந்து நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதன் காரணமாக திமுகவில் உட்கட்சி பூசல் பூதகாரமாக வெடித்த நிலையில் நகர மன்ற தலைவர் மீது துணைத் தலைவர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் தென்காசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : பேருந்து நிலையத்தை கூறு போட்டு விற்பனை செய்ய நகர் மன்ற தலைவர் முயற்சி-துணைத்தலைவர்  குற்றசாட்டு.

Share via