தபால் பெட்டி (போஸ்ட் பாக்ஸ்) - பொதிகைத் தமிழரசன்

by Admin / 17-08-2021 01:43:43pm
தபால் பெட்டி (போஸ்ட் பாக்ஸ்)  -  பொதிகைத் தமிழரசன்

லமரத்தின் கருத்து பருத்துத் திரண்டிருந்த அடித்தூரில் முகவாட்டத்துடன் உட்கார்ந்திருந்தான், செந்தில்...... முகம் குழந்தைதனத்திலிருந்து எந்த சந்தோஷத்தையும் அவன் அனுபவிக்க காலம் அவகாசம் தரவில்லை.....

பள்ளிக்கூடத்தில்கூட சக மாணவர்களோடு விளையாட முடிவதில்லை..... அப்படியே விளையாட சென்று விளையாடினால், அவன் விளையாட்டையும் விளையாட அழைக்கும் நண்பர்களையும் தவிர்த்தான்..... 


       கருக்கல் விலகி..... காலை புலர்ந்து......தூக்கம் கலைந்து எழுந்தவுடனே, களத்துமேடு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, குடம் சுமந்து, தடுப்பாகயிருக்கும் மண் சுவரில் மூன்று நான்கு இடங்களில் உள்ள சுவற்றில் இறக்கி வைத்து, மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து வைப்பதற்குள் வெறும் காலில் காய்ந்த வேலி முட்கள் வேறு இரண்டு மூன்று குத்தி..... ரத்தத்தைப் பாதத்தில் பதிய வைக்கும்..... எருக்கலச் செடி ஒடித்து.... பாலை, முள் குத்திய இடத்தில், தடவி, குடத்தின் சுமையோடு நடக்கும் பொழுது, வலி உயிர் போகும்..... அரிசி வாங்க;காய்கறி வாங்க;அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போக.... தம்பிகள் ஈரப்படுத்தி போட்டிருந்த துணிகளை-பாயை எடுத்து வாய்க்கால் தண்ணீரில் அலசி எடுத்து காய வைக்க அவன் வயதிற்கு மீறி வேலைகளைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.

       அம்மா வீட்டை விட்டு வெளியே வருவதில்லை....வரவும் கூடாது பெண்கள் நடை தாண்டி போவது ஆண்களின் கௌரத்திற்குக் குறைச்சல் என்பதால் சமைப்பது, பிள்ளைப் பராமரிப்பது என்பது மட்டும் அவள் வேலையாயிற்று....பல நேரங்களில், அப்பாவின் சம்பளம் வரவில்லை என்றால், பெரியம்மாவிடம் கடன் வாங்கி வரச் செய்து, பிள்ளைகளின் பசியைப் போக்குவது அவளுடைய கடமை.... மற்றபடி, எல்லாமே அப்பாதான்.... ஆனால், அனைத்தையும் சரியாகச் செய்யவில்லை..... பண்ணையாரின் களத்து மேட்டு வீடே கதி என்று இருந்து விட்டார்.

        குடியும் கூத்தியாளுமாகவே இருந்து விட்டார். காசு இல்லாத பொழுது அழுகை கண்ணீருமாகவே அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பார்த்தே அவள் மேல் பரிதாபம் வந்துவிட்டது. பெண் ஜென்மமே பாவம் என்றாகிவிட்டது. வருடத்தில் ஒரு நாள் தான்.... தீபாவளி, அதுவும் தீபாவளி விடியும் பொழுதில்தான், டெய்லர் கடையில் காத்துக் கிடந்து.... அந்தக் காட்டன் சட்டையும் ட்ராயரும் வாங்கிப் போட்டு மகிழும் வசதி.... புதுத்துணியின் வாசனையிலே ஆறு மாதம் கழிந்துவிடும்.... அடுத்த துணி எடுப்பதற்குள் சட்டையும் ட்ராயரும் அங்கங்கே நைந்து போய்.... நூல் இற்றுப் போயிருக்கும்....

 
         இன்று ஆலமரத்தில் கள்ளம் போலிசு விளையாடுகையில்தான்.... அது நிகழ்ந்து... ஒரு பையனை அவுட்டாக்கியதில் அவன் கோபம் கொண்டான்..... வன்மம் வைத்து விளையாட்டு முடிந்த பொழுது..... இவன் ட்ராயரின் பின் கிழிந்த பக்கம் பார்த்து, குப்பையில் கிடந்த காகிதத்தை எடுத்து வந்து...... "டேய் மணி, கதிரு லெட்டர் பாக்ஸ் இங்கிருக்கு..... யாராவது கடுதாசி போடுறதாயிருந்தா போடுங்க.... "என்று சொல்லி.... கிழிந்து, பிருஷ்ட சதையை வெளிக்காட்டிய ட்ராயரின் பக்கமாகக் காகிதத்தைத் திணித்தான்..... செந்தில் குன்றிப் போனான்..... அவமானம் தாங்க முடியவில்லை.... அழ முடியவில்லை..... ஏற்கனவே இறுகிப்போயிருந்ததால், இதை தன் தரித்திரத்தின் நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொண்டான்.

          அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. தன் ஏழ்மை மீது வேதனை கொண்டான். கண்களில் கசிந்த கண்ணீர் மனசின் காயத்தை வெளிப்படுத்தியது. மரத்தின் அடியில் பம்மி பதுங்கி மர பட்டை போன்று பழுப்பு நிறத்திலொரு கௌலி ஒன்று பச் பச் என்று சப்தமிட்டது.... 


          பழுத்து... மஞ்சள் நிறத்திலிருக்கிற இலைகள் ஒன்றிரண்டு உதிர்ந்து விழுந்தன.... ஆலம் பழம் தின்பதற்காக வந்த மைனாக்களும் காக்காக்களும் உட்காரும் பொழுது இலைகள் உதிர்கின்றன.... தெற்கே இடிந்த மண்டபத்திலிருந்து கழுதை கத்த ஆரம்பித்தது.....விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மூன்று சிறுவர் கழுதை கத்தவும் விளையாட்டை நிறுத்தி.... சட்டையின் கடைசி பொத்தான் கழற்றி, சட்டையின் பின்பக்கம் தூக்கி.... இரண்டு நுனிகளையும் ஒன்றாகச் சேர்த்து முடித்துப் போட்டார்கள்.... கழுதை கத்தும் போது இவ்வாறு செய்தால் பணம் கொட்டுமாம்..... 


           செல்லாங்குச்சி ஒன்று வேகமாகக் காலடியில் வந்து விழுந்தது. சட்டை போடாத அறுனாக் கயிற்றில் டாயரை சுற்றிக்கட்டியிருந்த ஒரு பையன் ஓடி வந்து குனிந்து எடுத்துச் சென்றான்.... 


           செந்திலுக்குத் துக்கம் தொண்டையை அடித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், பிஞ்சிலே பெற்ற கசப்பான அனுபவங்களாலும், வாழ்க்கையைக் கொடுமையால் உரமேரிய உள்ளம்..... இதை உதாசீனப்படுத்தியது. மெல்ல எழுந்து வீட்டுக்குச் சென்றான்..... 


           அவன் அப்பா நான்கு மணிக்கு, செல்லையா வேலை செய்யும் பண்ணையார் வீட்டிற்கு முன்புறமிருந்த கார் நிறுத்தும் போர்டிகோவில் நின்று கொண்டிருந்தான்.... பண்ணையார் மனைவி வெளிப்பட்டாள்.....

செக்கச் சிவந்த சொர்ணமாய் மின்னும் நிறத்தில், அழகு பதுமையாக இருந்த அவள்.... "டேய், செந்தில் மாதுளை மரத்தில் ரெண்டு மூன்று பழம் கெடக்கு....அதப்பறிச்சிட்டு மல்லிகைப் பூவை கொஞ்சம் பறி.... பின்னாடி போய்.... சமையல் கட்டுல பாத்திரம் வாங்கிக்கோ.... சீக்கிரம் பறி....இன்னிக்கு செவ்வாய் கிழமை கோவிலுக்குப் பூசை சாமான் வாங்கப் போகணும் புரியுதா..... "
"சரிங்கம்மா"
பண்ணையார் வீட்டம்மாவுக்குச் செந்திலைப் பிடிக்கும்..... எந்தவொரு வேலையாக இருந்தாலும் அவனிடமே சொல்வாள்.... கடைக்குப் போய் விட்டு வந்தால், மீதிச் சில்லறை காசை கொடுக்கும் பொழுது, ஐந்து, பத்து பைசாவோ எதாவது வாங்கிச் சாப்பிட்டுக்கோ என்று சொல்லி கொடுப்பார்..... 


சில நேரங்களில், காரிலே கோவிலுக்கும் கூட்டிச் செல்வதுண்டு.... டிரைவர் சீட் பக்கத்தில், முன்னிருக்கையில், சம்மென்று உட்கார்ந்து போவான்.... அப்படிப் போவது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்..... தான் காரில் போவதைத் தன் வகுப்பில் படிக்கும் யாராவது பார்க்க மாட்டார்களா? என்று ஆசைப்படுவான்.... ஆனால், இன்றுவரை யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. அதில் அவனுக்கு ஒரு மனக்குறை உண்டு.... 


 ஊரில் பிளைன் முத்து கார் இரண்டே கார்தான்.... மொத்தத்தில் ஐந்து கார். ஒரு ஐம்பாசிடர், பியட், மேரிஸ்மைனர்.... இந்தக் கார்களில் பிளைன் முத்துதான் நீளமான பெரிய சொகுசான கார்..... 
அதில் செல்லும் பொழுது, யாரும் பார்த்தேன் என்று சொல்லமாட்டாங்கிறாங்களே.....? அவனின் ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்பட்டது

 

கொய்யா மரம் ஏறி.... சின்னதாக,இரண்டு அறைகளாக, பழைய பொருட் போட்டு வைக்க கட்டப்பட்ட, காம்பவுண்ட் சுவர் ஒட்டிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஏறி.... அடர்ந்து கிளை பரப்பி.... நீண்டு வளர்ந்திருந்த மாதுளை மரத்திலிருந்து இரண்டு மாதுளைகளைப் பறித்தான்.... மற்றவைகள் எல்லாம், சின்னச்சின்ன பிஞ்சாகயிருந்தன.... இன்னும் இரண்டு மாதம் சென்றால் தான், விளைந்து முத்துக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்....


கைகெட்டிய தூரத்திலிருந்த கொய்யா மரத்தில் அணில் கடித்த, பக்கத்தில் இளம் மஞ்சள் பச்சையிலிருந்த கொய்யாவைப் பறித்து.... கடித்தபடியே கீழே இறங்கினான்.... கார் வந்து போவதற்காகப் போடப்பட்ட பெரிய கேட்டிற்குப் பக்கத்திலிருந்த,அடர்ந்த மல்லி செடியில், வெள்ளை மொட்டுக்களாக, விரிந்த பூக்களை மணம் பரப்பி மலர்ந்திருந்த மல்லிகளை சட் சட்டென்று காம்பிலிருந்து பறித்தெடுத்தான்.... 


           குவியலாக வந்த பூவையும் மாதுளையையும் கொடுத்த பொழுது முதலாளியம்மா சிரித்து வாங்கிக் கொண்டாள்.....உள்ளே சென்ற முதலாளி மனைவி சற்று நேரத்தில் கையில் குழல் முறுக்குடன் வந்து, 'செந்தில், இது சாப்பிட்டுகோ.... கடைக்குப் போய்.... இந்தச் சீட்ல இருக்கிறத வாங்கிட்டுவா...'


             செந்தில் முறுக்கோடு பணத்தையும் பொருள் வாங்க குறித்துக் கொடுத்த காகிதத்தையும் வாங்கிக் கொண்டான்.... போகாமல் நின்றான்.... 
         "என்ன? "

           "அம்மா..... போட்டிருக்கிற சட்டையும் ட்ராயரும் கிழிஞ்சிடுச்சி.... பசங்க ரொம்ப கேலி பண்றாங்க.... ஒரு பழைய சட்டையும் ட்ராயரும் இருந்தா கொடுங்கம்மா.... "


             தலை குனிந்து கொண்டே சொன்னான், செந்தில், அந்த அம்மையார் அவனை ஏற இறங்க பார்த்து... அவன் சொன்னது உண்மை தான் என்று ஊர்ஜிதம் செய்தபடி...., "கடைக்குப் போயிட்டு வா..... நான் பீரோல இருக்கான்னு தேடி எடுத்து வைக்கிறேன்... " "சரிம்மா"   தலையை ஆட்டி வேகமாக.... கீரிசிட்ட சின்ன கேட்டைத் திறந்து மூடி விட்டு.... ட்ரு.... ட்ரு... ட்ரு என்று வாயால் ஆக்ஸிலேட்டர் செய்து... காரை சார்ட் செய்வது போல செய்து.... பஸ்ட் கியர் போட்டு, இடது கையால் செகண்ட் கீயர் மாற்றி.... வேகமாக.... சிட்டாகப் பறந்தான்.சட்டையும் ட்ராயரும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில்..... தூணில் சாய்ந்தபடியே நின்றிருந்தான் செந்தில்.... 


           மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது... முதலாளி எப்படியும் எட்டு மணிக்குத் தான் வருவார்.... சட்டையையும் ட்ராயரும் வாங்கி.... வீட்டில் கொண்டு வைத்து விட்டுத்தான், அப்பாவின் வாரச் சம்பளத்தை வாங்க வரவேண்டும்..... 


           வீட்டுக்குள் பீரோ திறக்கிற,மூடுகிற சப்தம் அடிக்கடி கேட்டது.... தனக்கு சட்டையும் ட்ராயரும் முதலாளி அம்மா தேடுகிறார்கள் என்று நினைத்தான். சற்று நேரத்தில் காரின் சப்தம் வாசலில் கேட்டது... ஓடிபோய் கேட்டை திறக்கப்போனபோது டிரைவர்... வேண்டாம் என்று சைகை காட்டி விட்டதால், திரும்பி வந்து, அதே இடத்தில் தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.... 


           மங்களகரமான.... கையில் எவர் சில்வர் முதலாளி மனைவித் தூக்கோடு வாசலுக்கு வந்தாள்.... 


          "செந்திலு.... பீரோவில் தேடிப் பார்த்தேன்.... பழசு எதுவுமில்லை.... நாளைக்குக் காலைல பெரிய முதலாளி வீட்டுப் போய் பெரியம்மாவிடம் கேளு.... அவங்க தருவாங்க.... நான் போன்ல சொல்லிட்டேன்.... நான் கோவிலுக்குப் போய்ட்டு வர்ரேன்.... "


           அம்மா இறங்கி, காரில் ஏறி உட்கார கார் கிளம்பியது....இவ்வளவு நேரம் ஆவலோடு எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம். மனசு வலித்தது. உடலின் ஈரம் முழுவதும் சட்டென்று வற்றி போனது போன்ற தவிப்பு. 


          தேற்றிக் கொண்டான்.... இருந்தால்  தந்திருப்பார்கள்.... இல்லை..... அதனால் தானே நமக்காகப் பெரியம்மாவிடம் சொல்லி நாளைக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.... நாளை வாங்கிக் கொள்ளலாம்.... தனக்குள் சமாதானமடைந்தான்...

          அரண்மனைப் போன்ற மூன்றடுக்கு மாடி வீடு.... முன்புறம் நடைபாதை இரு மருங்கிலும் தென்னைமரமும், கொய்யா, மாதுளை, மல்லி செடிகளும்.... வரிசையாக நடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளும்.... நிழற்பாங்கான இடத்தில் சிமிண்டிலான பெஞ்சும்.... போடப்பட்டிருந்தது... வீட்டுக்குள் பூஞ்சோலையை ஞாபகப்படுத்தியது.... செந்தில் வாசல் முகப்பில் மரத்தாலான தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான்... கண்ணை இடுக்கி வீட்டின் உட்புறம் நோக்கினான்.... நீண்ட உள் அடுக்கு அறைகளைக் கொண்ட வீடானதால்.... யார் வருகிறார்கள்.... போகிறார்கள் என்று தெரியவில்லை.... இருட்டாக இருந்தது.... ஆனால், மனிதர்கள் அங்குமிங்கும் செல்லும் நடமாட்டம் மட்டும் நிழலசைவது போலிருந்தது. கால் கடுக்க நின்றிருந்தான்....

          யாரும் வரவில்லை...கொஞ்ச நேரம் சென்றபின்... சமயக்காரி வெளியே வரவும்..... 
          "பெரியம்மாட்ட நான் வந்திருக்கேன்னு சொல்லுங்க.... வந்து ரொம்ப நேரமாகுது... "


           வீட்டின் முன் அறையில், மரத்தாலான சாய்நாற்காலியில் படுத்திருந்த அம்மாவிடம் சமயக்காரி சரசு.... "அம்மா, கணக்காபிள்ளை, சின்ன பையன் வந்து நிற்கிறான்... " என்று வெளியிருந்தே உள்நோக்கி குரல் கொடுத்தாள்...பதிலுக்குபதிலுக்கு உள்ளேயிருந்து "அவனை, உள்ளே வரச்சொல்லு.... " இருட்டான பகுதியிலிருந்து அழைப்பு வந்தது.... செந்தில் உள்ளே சென்று தேக்கலான... தடித்து....பித்தளைப் பூண்வைத்த கதவைப் பிடித்தவாறு, "அம்மா, கூப்பிட்டிங்களா? "


           "என்ன செந்திலு... "
            சின்னம்மா.... உங்ககிட்ட பழைய சட்டையும் ட்ராயருமிருந்தா வாங்கிடச்  சொன்னாங்க.... "    
           "நீ ஸ்கூல் லீவுல பெயிண்ட் அடிக்கப் போவியாமே..... "


           "ஆமாம்மா... சுந்தரம் தாத்தா கூட்டிட்டு போவாரு... ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுப்பாரு.... எதாவது பெயிண்ட்                                      அடிக்கணுமாம்மா.... "


            புத்திசாலி பையன்... அண்ணங்க ரெண்டு பேரும் காலேஜ்ல சேர்ராங்கல்ல,அவங்களுக்குத் துணிமணி வைச்சுக் கொடுக்கிற ட்ரங்பெட்டி பழசாயிருச்சி.... நீ கடையில போய் என்ன பெயிண்ட் வாங்கணுமோ ஓடி.... வாங்கி.... அடிக்கிறியா...."

"சரிம்மா.... "

           சிவப்புபச்சைவெள்ளை_ஊதா என பெயிண்ட் பிரஸ் வாங்கி வந்து.... பழைய ட்ரங்பெட்டியை... உப்புத்தாள் கொண்டு நன்றாக அரைச்சித் தேய்த்து... தண்ணீர் விட்டு கழுவி.... சிமிண்ட் பெஞ்சில் காய வைத்தான்... ஈரம் காய்ந்த ட்ரங்பெட்டியை பழைய துணியால் துடைத்தெடுத்து.... சாக்பீஸால் பூப்போன்று வரைந்து அதன்மீது.... பெயிண்ட் அடித்தான்.... 


          கொய்யா மதத்திற்கும் பாக்கு மரத்திற்குமிடையே கொச்சை கயிற்றால் ஊடாகக் கட்டி.... அதில் காயவைத்தான்.... ஒரு மணி              நேரத்தில் பழைய ட்ரங்பெட்டி  பளிச்சென்று வண்ணமயமாகக் காட்சித்தந்தது.

           பழைய மருந்து பாட்டில் எடுத்து... அதன் தலை முடியை... ஓட்டை இட்டு... மண்ணெண்ணெய் ஊற்றி... துணி கிழித்து... திரியாக்கி... அதில் நெருப்பு பற்ற வைக்க... கரும்புகை சுருள் சுருளாக வெளிவந்தது.... உலர்ந்தும் உலராதுமிருந்த பெயிண்ட் அடித்த பெட்டியைக் கயிற்றிலிருந்து அவிழ்த்து.... தன் சக்திக்கு மீறி.... பாட்டிலிருந்து குபுக் குபுக் கென்று வெளிவரும் கரும் புகையின் மீது வைத்து.... அங்குமிங்கும் திருப்பித் திருப்பிக் காட்ட... பெயிண்டின் மீது ஓவியம் தீட்டியது போன்ற வடிவங்கள் கரும்புகையால் வரைதந்தது போலிருந்தது.... செந்தில் இதை மும்பமுரமாகச் செய்வதை, அவன் அறியாமல், வீட்டிலிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்... இஞ்சினியரிங் படிக்கப்போகும் முதலாளியின் மூத்த மகன்.... பி. யூ. சி.... முதல் வகுப்பில் தேறிய பிரகாசம், அம்மாவிடம், "இத்தினிண்டு இருந்துட்டு என்ன வேலை யெல்லாம் கத்து வைச்சிருக்கான் பாருங்கம்மா......             

 "பெரியம்மா சொன்னார்..... 

அவன் அப்பாவிற்குள்ள திறமை இல்லாமலா போகும்.... "
பாராட்டுகள் காதில் விழுந்தாலும் அதைச் செந்தில் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.... அவனுக்கு வார்த்தைகள் தரும் சுகம

இன்பம் தேவைப்படவில்லை.... தன்மானம் காக்க.... ;அவமானத்திலிருந்து தப்பிக்க.... வழி கிடைத்தால் போதும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுள்ளென்று அடித்த வெயில்.... காய்ந்த பெட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கி கொண்டு போய் வீட்டினுள் வைத்தான்.... கைகளில் வழிந்திருந்த பெயிண்டை மண்ணெண்ணெய் ஊற்றிக் கழுவி.... துணியால் அழுத்த அழுத்த தேய்த்து... பெயிண்டின் கறையை எடுத்தான்.... பின் வாசல் வழியாக வந்து மாட்டுக் கொட்டகைப் பக்கத்திலிருந்த அடிபம்பில் இடது கையால் தண்ணீர் அடித்து, வலது கையை... காலைக் கழுவி... முகத்தில் தண்ணீர் வாரி நிறைத்து கழுவி வெளியேறினான்.... 

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.... மயக்கமாக வந்தது. அப்படி இப்படியாக அரை மணி நேரம் கழிந்தது.... பெரியம்மா வந்தார்.... கையில் மெரூன் கலரில் சட்டையும் சிமெண்ட் கலரில் ட்ராயரையும் கொண்டு வந்து, "இந்தாப்பா.... " என்று அவனிடம் நீட்டி செந்தில் முகம் ஆயிரம் வால்ஸ் பல்பாக பிரகாசிக்க..... இருகை ஏந்தி வாங்கினான்.... சட்டை ட்ராயரிலிருந்து குப்பென்று வீசிய மெல்லிய இதமான செண்ட் நறுமணம்.... அவனை ஆனந்தத்திலாழ்த்தியது... 
     

 "நன்றிங்கம்மா... நான் வர்றேன்... " சட்டை ட்ராயர் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பிஞ்சு உள்ளம் நடந்தது... தனக்குரிய தேவையைத்தானே.... உழைத்து வாங்கிய.... கம்பீரம், செந்திலின் நடையிலிருந்து வெளிப்பட்டது....  


 இனி யாரும் அவன் ட்ராயரை தபால் பெட்டி என்று சொல்லி பழைய காகிதங்களைத் தூக்கித் திணிக்கமாட்டார்கள்.....

 

Tags :

Share via