கார்த்திகை தீபத்திருவிழா:டிக்கெட், அனுமதி அட்டையில் உள்ள கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் -அமைச்சர் எ.வ.வேலு

by Editor / 07-12-2024 08:09:21am
கார்த்திகை தீபத்திருவிழா:டிக்கெட், அனுமதி அட்டையில் உள்ள கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் -அமைச்சர் எ.வ.வேலு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஏற்கனவே இரண்டு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்து துறைகள் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், கடந்த இரண்டு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எல்லாம் நடைபெற்றுள்ளதா அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது என்றும், தீபத்திருவிழாவின் 5ம் திருவிழாவில் இருந்து தான் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கு ஏற்றார் போல் அனைத்து பணிகளும் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது என்றும்,

ஒவ்வொரு ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அனுமதி பாஸ் பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், இந்த முறை அந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க கோயிலுக்குள் செல்லும் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மூன்று துறைகள் சார்ந்த அலுவலர்கள் அங்கு பணியில் இருப்பார்கள் எனவும், இந்த முறை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எவ்வித பிரச்சனையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
கோயிலுக்கு எவ்வளவு எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கலாம் என்று பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பரணி தீபத்திற்கு 6 ஆயிரத்து 600 பக்தர்களும், மகா தீபத்திற்கு 11 ஆயிரத்து 500 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும், ஆன்லைன் டிக்கெட் பரணி தீபத்திற்கு 500 டிக்கெட்டுகள், மகா தீபத்திற்கு ஆயிரத்து 100 டிக்கெட் அனுமதிக்கப்பட உள்ளது.

இந்த முறை  டிக்கெட், அனுமதி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் யாரும் வெளியே நிற்கும் நிலை இருக்காது என்றும், கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் கவுன்டர்கள் அதிகமாக்கப்பட்டாலும், கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து பக்தர்களும் அவர்களிடம் உள்ள டிக்கெட், அனுமதி அட்டையில் உள்ள கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்காக 7 இடங்களில் மையம் அமைக்கப்பட்டு விரைவாக ஸ்கேன் செய்து அனுமதிக்கப்பட உள்ளதாகவும், ஆன்லைக் டிக்கெட் பெறுபவர்களுக்கு தனியாக கவுன்டர் அமைக்கப்பட உள்ளது. அதன் வழியாக அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
 

 

Tags : கார்த்திகை தீபத்திருவிழா:

Share via