டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

by Editor / 09-12-2024 04:39:40pm
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோயில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார். தீர்மானத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.


பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது:மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. அப்போது மாநில அரசு வேண்டாம் என தெரிவித்திருந்தாலே போதுமானது. இதை பொருட்படுத்தாமல் அன்றைகே எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.


அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து  பேசியதாவது:இந்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கையில் :மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்தவுடன், அரிட்டாபட்டி பல்லுயிர் பெருக்கத்தை சுட்டிக்காட்டி அனுமதி அளிக்கக்கூடாது என உடனடியாக கடிதம் எழுதினோம். அத்திட்டத்திற்கான எதிர்ப்பையும் பதிவு செய்தோம். மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்காமல் ஏலம் விடலாம் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோதே தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்ப்பை உள்வாங்கி அதனை நிறுத்த வேண்டும் என நினைத்திருந்தால் அதனை அன்றே நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம். நீங்கள் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள்.

 இருவரது பேச்சுக்கும் பதிலளித்த நயினார் நாகேந்திரன் பேசும்போது:மத்திய அரசு துரோகம் செய்வது போல பேசுகிறீர்கள். எங்களை பொறுத்தவரை இதனை தமிழக அரசு முன்கூட்டியே தடுத்திருக்கலாம். சட்டங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்படுவது.

 நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்:மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் பாஜக தடுத்து நிறுத்தும் என கூறினீர்கள். எனவே நீங்கள் உணர்ந்து உங்கள் கட்சியிடம் சொல்லி இத்திட்டத்தை ரத்து செய்ய சொல்லுங்கள் எனக் கூறினார்.


இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு 10 மாதங்களான நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்துக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு எந்தவித கடிதமும் எழுதவில்லை என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், இதை தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளோம். போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எங்கள் கண்டன குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஏலம் விடப்பட்டாலும், இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது. நான் முதலமைச்சராக இருக்கும் காலம் வரையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. அமையும் சூழல் ஏற்பட்டால் முதலமைச்சர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன். கொண்டு வந்தால் தடுத்து நிறுத்துவோம்” என தெரிவித்தார்.

இறுதியில் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்..

 

Tags : டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Share via