சலூன் கடை ஊழியரை தாக்கி தலைமறைவாக இருந்த விசிக பிரமுகர் கூட்டாளியோடு கைது சொகுசு கார் பறிமுதல்..
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள லைம் ட்ரெண்ட்ஸ் சலூன் கடை ஊழியர் அஜித்குமார் மற்றும் அவரது சக ஊழியர் ஆகியோர் கடந்த 17ம் தேதி இரவு பணி முடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட பொழுது வேலூர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் ஓட்டுனர் கவனக்குறைவால் பின்னோக்கி வந்து இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் இருந்த திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கினர்.
தொடர்ந்து தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித்குமார் தனது கடைக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்த போது கடைக்குள் அத்துமீறி உள்ளே சென்று கொலை வெறி தாக்குதலுடன் கொலை மிரட்டல் விடுத்து அஜித்குமாரை தாக்கி அங்கிருந்து காரில் தப்பித்தனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் பரபரப்பாகி வெளியான நிலையில் நேற்று சலூன் கடையின் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அருண்குமாரின் செல்போன் எண்ணை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் மறைந்திருப்பதாக தகவல் அறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான நாகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவண்ணாமலை சேர்ந்த மாரி மற்றும் மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இவர்கள் தப்பிக்க பல்வேறு விதத்தில் உதவிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags : சலூன் கடை ஊழியரை தாக்கி தலைமறைவாக இருந்த விசிக பிரமுகர் கூட்டாளியோடு கைது சொகுசு கார் பறிமுதல்..



















