மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு.

by Editor / 20-12-2024 07:10:49am
மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு.

ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த டிச.17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (டிச.19) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி மறுத்திருந்தார். தொடர்ந்து, ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பன்சுரி சுவராஜ் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். ராகுல்காந்தி தள்ளி விட்டதில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்.பி.க்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags : மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு.

Share via