வங்கிச் சேவை  மாற்றங்களை நோக்கி பயனர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

by Editor / 31-03-2025 10:00:18pm
வங்கிச் சேவை  மாற்றங்களை நோக்கி பயனர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வங்கிச் சேவைகளுக்கும், பணப்பரிமாற்றத்திற்கும் இணையவழி செயலிகளைத்தான் நாம் எளியதாக பயன்படுத்துகிறோம்.கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.பெட்டிக்கடையில் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை இந்த நவீன தொழில்நுட்ப பணமாற்றம்தாம் நம்பாக்கெட்டில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டில் இல்லையென்றால், அந்த வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தொண்ணூறு நாட்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாத தொலைபேசி எண்கள் அல்லது ஏற்கனவே புதிய பயனர்களுக்கு வழங்கப்பட்ட எண்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கம், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் தவறான பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதுதான். தற்போது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும், பயனர்களின் பணத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்திருக்கும் தொலைபேசி எண் தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக பழைய தொலைபேசி எண்ணை உபயோகிக்காமல் இருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குச் சென்று புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும். இதற்கான கடைசி தேதி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஆகும். இந்த காலக்கெடுவுக்குள் உங்கள் தொலைபேசி எண்ணை புதுப்பிக்க தவறினால், உங்கள் வங்கிச் சேவைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

Tags : வங்கிச் சேவை  மாற்றங்களை நோக்கி பயனர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

Share via